குப்பைகளை பொறுப்பற்ற வகையில் வீதிகளில் வீசுவதால் கண்காணிப்பு கமராக்களின் மூலம் அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை

7 0

வீதிகளில் குப்பைகளை பொறுப்பற்ற முறையில் வீசுபவர்களால் உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிப்பு கமராக்களை பொறுத்தி அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (05) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,

இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த மாநகர முதல்வர், தவிசாளர்களை வரவேற்றதுடன், இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்ததன் மூலம் ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்க முடியும்.

சுற்றாடல் குழு கூட்டமானது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை நடத்தப்பட வேண்டும் என சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

மேலும், திண்மக்கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும். அதற்கு பொதுமக்களின் விழிப்புணர்வு செயற்பாடுகள் தேவைப்படுகின்றது.

குப்பைகளை வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வீசுபவர்களை கண்காணிப்பதற்கு – உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிப்பு கமராக்களை பூட்டி அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளன.

மேலும் பிரதேச செயலகங்களில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சுற்றாடலுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் இருப்பதனால் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பிரதானமாக பின்வரும் விடயங்கள் அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் திண்மக் கழிவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கான போதியளவு விழிப்புணர்வு இருப்பதனால் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அரச, தனியார் நிறுவன திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறும், மார்ச் முதலாம் திகதியிலிருந்து உள்ளுர் அதிகார சபையினால் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது

.ஏதாவது திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் பொலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனகூட்டத்தில் தெரிக்கப்பட்டது.

ஒலிபெருக்கியின் பாவனையால் அதிகப்படியான இடையூறு ஏற்படின், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு தகவல்களை வழங்குவதன் ஊடாக பிரதேச செயலாளர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

பொதுமக்கள் வளி மாசடைதல் தொடர்பாக WWW.CA.AQ.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் டெங்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர், உள்ளூர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்து தொடர்ச்சியான கண்காணிப்புக்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வழங்க வேண்டும்.

இக் கலந்துரையாடலில் மாநகர முதல்வர், பிரதேச சபையின் தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.