முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

304 0

முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 80 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமது உறவுகளின் தகவல்களை பெற விண்ணப்பித்தனர்.

ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மற்றும் கடந்த 9 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 227 விண்ணப்பங்கள் மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு பதில் கடிதங்கள் மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்படுகின்றது.

அந்த கடிதத்தில் தகவல் பெறுவதற்கு வழங்கிய விண்ணப்பபடிவமானது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டது.

தங்களின் விண்ணப்பம் தொடர்பான தகவல்களை பெற முடியாத காரணத்தால், தங்களின் தகவல்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் தகவல் அறியும் சட்டம் 31 ஒன்றின் பிரகாரம் மேன் முறையீடு ஒன்றினை 14 நாட்களுக்குள் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் அறியத்தந்துள்ளார் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு ஜனாதிபதி செயலகம் இவ்வாறு பதிலளித்தால் தாம் எங்கே செல்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.