யேர்மனியில் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி, அவற்றை ஒரே நிருவாகத்தின் கீழ் சிறப்பாக நடாத்திவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் பாக்நாங் நகரிலும் 2002.09.21இல் தொடங்கி, பத்து ஆண்டுகள் சிறப்புடன் நடைபெற்றுவந்த தமிழாலயம், அந்நகரில் தமிழ்பயிலும் பிள்ளைகளின் குறைவுநிலை கரணியமாக 2012ஆம் ஆண்டில் எமது தமிழ்ப்பணி அங்கே இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பாக்நாங் நகரில் புதிய தமிழாலயம் உருவாக்கம் பெற்றுள்ளது.
பாக்நாங் நகரில் வாழும் எமது அடுத்த தலைமுறையினரின் 27 தமிழ்த் தளிர்களுடன், பாக்நாங் நகரிலிருந்து சென்று லூட்விக்ஸ்பூர்க், கைல்புறோன் ஆகிய தமிழாலயங்களில் தமிழ் கற்றுவந்த எட்டு மாணவர்களும் தொடக்க நாளன்று இணைந்துகொண்டனர். அவர்களுக்குத் தாய்த்தமிழைக் கற்பிக்கும் உன்னத பணிக்காக ஏழு ஆசிரியர்களும் அன்றையநாள் இணைந்துகொண்டனர்.
14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலுடன் பாக்நாங் தமிழாலயத் தொடக்கவிழா தொடங்கியது. பொதுச்சுடரை உலகத் தமிழர் இயக்கத்தை உருவாக்கிய முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் தமிழ்க் கல்விக் கழகத்தின் இந்நாள் ஆவணப்பிரிவுப் பொறுப்பாளருமான திரு. நாராயணசாமி மனோகரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயப் பண் என்பவற்றுடன் தொடங்கிய விழாவில், மங்கலவிளக்கைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், பாக்நாங் நகரச் செயற்பாட்டாளர் திரு. செல்வரட்ணம் நவரட்ணம் தென்மாநிலச் செயற்பாட்டாளர் தமிழ் வாரிதி திருமதி பிரமிளா சுரேஸ்குமார், பாக்நாங் தமிழாலயத்தின் முன்னாள் நிருவாகியும் ஆசிரியருமான திருமதி புஸ்பராணி மனோகரன் மற்றும் புதிய நிருவாகியும் ஆசிரியருமான திருமதி சந்திரவதனி அலோசியஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளரின் வரவேற்புரையும் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் தொடக்க உரையும் இடம்பெற்றன.
லூட்விக்ஸ்பூர்க் தமிழாலயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவந்த திருமதி மதிவதனி அலோசியஸ் அவர்கள் பாக்நாங் தமிழாலயத்தின் புதிய நிருவாகியாகவும் பிரிவுசார் செயற்பாட்டாளர்களாக ஆசிரியர்களும் தமிழ்க் கல்விக் கழகத்தால் பணியமர்த்தப்பட்டனர். அன்றையநாள் மாணவர்களுக்கான முதல்நாள் கற்பித்தலும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெறும் கற்பித்தலானது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 09:00 மணி தொடக்கம் 13:00 மணிவரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாக்நாங் தமிழாலயத்தின் மீள் உருவாக்கத்திற்காக அயராது உழைத்த ஆசிரியை திருமதி மதிவதனி அலோசியஸ் அவர்களின் தனித்திறன், பொறுப்புணர்வு, பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு என்பவற்றை இத்தருணத்தில் மிகவும் பாராட்டுகின்றோம். யேர்மனியில் சிந்திச்சிதறிச் சிறிய நகரங்களில் வாழும் எமது இரண்டாந் தலைமுறையினரும் தமது மூதாதையர்களின் மொழி, பாரம்பரியங்களைத் தமது பிள்ளைகளுக்குக் கைமாற்றுச்செய்வதில் விருப்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் பட்டயம் கூறுகின்றது.




























