35ஆவது அகவை நிறைவில் திளைத்த தமிழாலயம்-கனோவர்.

79 0

07.12.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலம், மொழி, கலை மற்றும் பண்பாடு என்பற்றைக் காத்திடும் நோக்கோடு களமாடி வித்தானோரை நினைவுகூரும் வகையில் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நீடசக்ஸன் மாநில அறிவியல் மற்றும் கலாசார அமைச்சர் திரு. பால்கோ மோர்ஸ் அவர்களால் பொதுச்சுடரேற்றி வைக்கக் கனோவர் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவு விழா தொடங்கியது.

சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நீடசக்ஸன் மாநில அறிவியல் மற்றும் கலாசார அமைச்சர் திரு. பால்கோ மோர்ஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) கனோவர் நகர ஆட்சிக்குழு இணைத் தலைவர் முனைவர் திரு. பாலசுப்பிரமணியம் ரமணி, சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD)கனோவர் நகர ஆட்சிக்குழுத் துணைத் தலைவர் முனைவர் திரு. கன்ஸ் யுற்கென் கொவ்மன், ஸ்ரொய்கென் ஒருங்கிணைந்த நடுநிலைப் பள்ளியின் மேலாளர் முனைவர் திருமதி பெக்கி றிச்செற், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணை இணைப்பாளர் திரு. சிவலிங்கம் கிருஸ்ணகுமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர் திரு. இளையதம்பி துரைஐயா மற்றும் கனோவர் தமிழாலயத்தின் பெற்றோர் பிரதிநிதி திருமதி கல்பனா பாலச்சந்திரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க அரங்க நிகழ்வுகள் தொடங்கின. அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றைத் தொடர்ந்து கனோவர் தமிழாலய நிருவாகி திருமதி விமலகாந்தி உலகநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

ஆசியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கியதுடன் வாழ்த்துரையும் ஆற்றினார். கலை நிகழ்வுகள், மதிப்பளிப்புகளுடன் 35ஆவது அகவை நிறைவைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்தி அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்பு மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பிரிவுப்; பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் வெளியிட்டுவைத்து வெளியீட்டுரை ஆற்றினார். முதற்பிரதியை முன்னாள் நிருவாகி திரு. தில்லைநாயகம் வசந்தகுமாரன் அவர்களும் அவரது துணைவியாரும் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ.மனோகரன், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணை இணைப்பாளர் திரு. சிவலிங்கம் கிருஸ்ணகுமார் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. தமிழாலயத்தின் முன்னாள் செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

தமிழ்க் கல்விக் கழகத்தினர், அயல் தமிழாலயங்களின் நிருவாகிகள் முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பியர் ஆகியோரென மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு, யேர்மனியில் இன்னும் பல்லாண்டு தமிழ்த்தடம் தொடரும் என்பதன் சான்றாக முன்னாள் மாணவரும் இந்நாள் மழலையருமாய் இருதலைமுறை இணைந்த சங்கமமாய் அமைந்த 35ஆவது அகவைப் பெருவிழா தமிழரின் தாகத்தைச் சுமந்தவாறு தமிழீழம் என்ற உன்னத இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையோடு 18:20 மணிக்கு நிறைவுற்றது.