ஜனாதிபதி தேர்தல்: 26-ந் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் – சோனியாகாந்தி ஏற்பாடு

234 0

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக டெல்லியில் நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்ட உள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவி வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஜூலை மாதம் இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் கமி‌ஷன் விரைவில் வெளியிட உள்ளது.

ஜனாதிபதியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். தற்போது மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இருவரையும் பா.ஜனதா கட்சி கூட்டணி தம் சொந்த பலத்தில் தன்னிச்சையாக தேர்வு செய்யும்நிலையில் உள்ளது.

இதனால் ஜனாதிபதியாக பா.ஜ.க மேலிடம் யாரை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இன பெண் தலைவரை பா.ஜ.க ஜனாதிபதியாக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியை மிக எளிதாக பா.ஜ.க தேர்வு செய்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடும் வேலைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓரணியில் திரட்டி வருகிறார்.

கடந்த சில தினங்களாக அவர் இது தொடர்பாக மாநில கட்சித்தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் அவர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கைகளை சோனியா தற்போது எடுக்கத்தொடங்கி உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் நாளை மறுநாள் (26-ந் தேதி வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் உறுதி செய்துள்ளன. இடது சாரிகள் உள்பட மேலும் பல கட்சிகளை கூட்டத்தில் பங்கேற்க செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்று மாலை எந்தெந்த கட்சிகள், ஓரணியில் திரள உள்ளன. என்ற விவரம் தெரியவரும்.இதனால் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.