இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வரிச்சலுகை: மத்திய அரசு ஒப்புதல்

187 0

ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு சிறப்பு வரிச்சலுகை வழங்கியுள்ளதாக துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது உதிரிபாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய சிறப்பு வரிச் சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக துறை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் தயாரிப்பு பணிகளை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
பெங்களூருவில் இயங்கி வரும் விஸ்ட்ரன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE மாடல்களை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சீனாவில் ஐபோன் விற்பனை சரிவை சந்தித்து வரும் நிலையில், மற்ற சந்தைகளில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 5 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தயாரிப்பு பணிகளை துவங்க ஆப்பிள் இறக்குமதி செய்யும் அனைத்து உதிரி பாகங்களுக்கும் சிறப்பு வரிச்சலுகைகள் 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் கோரியிருந்தது.
மத்திய அரசு துறையை சேர்ந்த மந்திரிகள் ஆப்பிள் கோரிக்கையை நிராகரித்து, உள்நாட்டு தயாரிப்பில் அதிக முக்கியத்துவம் வழங்குவதற்கு ஏற்ப சிறப்பு சலுகைகளை வகுத்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்க முடியாத உதிரி பாகங்களுக்கு மட்டும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனால் உள்நாட்டு தயாரிப்பு அதிகரிக்கும் என சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உள்நாட்டு தயாரிப்புகளின் அளவை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது, எனினும் இருதரப்பு திட்டங்களிலும் வேறுபாடு உள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.