தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது: கனிமொழி

249 0

தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் இந்தி மொழி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழர்களுக்கு என தனி அடையாளம் இருக்கிறது. பா.ஜ.க. அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது. தி.மு.க. இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை. கலாசாரம், கல்வி, மொழி, மதம் என அனைத்து திணிப்புகளையும் எதிர்க்கிறது.

தமிழர்களின் சிந்தனையை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்தால் தோற்றுப்போகும். செல்போன், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இனி மனிதனால் வாழ முடியாது. இவைகள் எல்லாம் மனிதர்களை சிந்திக்க தூண்டுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் பேர் பெரிய அளவில் டாக்டர்களாக உள்ளார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த இட ஒதுக்கீடு தான். நீட் தேர்வு எழுதினால் தான் டாக்டராக முடியுமா? தமிழகத்திற்கு தற்போது நீட் தேர்வுக்கு என்ன அவசியம் வந்தது?.

இந்தியா ஒருங்கிணைந்த தேசம் என்று பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் தண்ணீர் கேட்கும்போது மாநில பிரச்சினை என்று கூறுகின்றனர். விவசாயிகளை சந்திக்க பிரதமர் மறுக்கிறார். மத்திய அரசு தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை சிந்திக்க கூட மறுக்கிறது.

தமிழகத்தில் இந்தி மொழியை திணித்தால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும். மொழிக்காக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் தான் தமிழுக்காக உயிர் தியாகம் செய்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் அறிவிப்புகளை இந்தியில் அறிவிக்கின்றனர். தேர்வுகளையும் இந்தியில் நடத்துகின்றனர். பா.ஜ.க. பிரமுகர்கள் இந்தியில் பேசுகின்றனர். இது அனைவருக்கும் உகந்ததாக இல்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.