மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் மக்களின் நிதிப்பங்களிப்புடன் அடம்பன் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 225 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் கூட்டுறவு மண்டபத்தில் 16.11.2025 அன்று மாலை 3.00 மணியளவில் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக மாவீரர் புகழ்தமிழனின் தந்தை பர்ணபாஸ் அவர்கள் பொதுச்சுடரேற்ற, பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை அருட்தந்தையர்கள் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. எழுச்சி உரைகளினை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரும் அருட்தந்தை றொபேட் அடிகளாரும் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அடிகளாரும் உணர்வோடு வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழு தலைவர் மாவீரர் நெடுங்கீரனின் தந்தை சாமிநாதன் அவர்கள் மாவீரரின் ஈகங்கள் சார்ந்து உரையாற்றினார். அத்தோடு தேனீர், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக நல்லின தொம்தேசி மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் அருதந்தையர்கள், சட்டத்தரணிகள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.


















