நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து

28 0

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும்  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒக்டோபர் மாத தவிசாளர் தியாகராஜா நிரோஷ்  தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் அவசர நடவடிக்கைக்கான பிரேரணையாக சபையின் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கடந்த சபையில் நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் மூலம் நிதிநிறுவனங்கள் சட்டம் ஒழுங்கு அந்நிறுவனங்கள் வரையரைக்குப் புறம்பாக செயற்படுவது நீண்ட முயற்சியினால் மட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

தற்போதைய நிலையில் மீளவும் கிராமங்கள் தோறும் நுண்நிதிக்கடன் வழங்குனர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக ஈடுபடுவதன் வாயிலாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டின் நடைமுறையில் உள்ள நிதி சார் சட்டம் ஒழுங்குகளின் வாயிலான கடப்பாடுகளை பூர்த்திசெய்யாது அவற்றினை அந் நிறுவனங்கள் மீறிவிடுகின்றனர்.

இதனால் பெரும் இன்னல்களுக்குள் கிராமப்புறப் பெண்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். பிரதேச சபை நடைமுறையில் செயற்படும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்குள் கண்காணிக்க வேண்டும். அவற்றின் அத்துமீறல்கள் தொடர்பாக உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சபை உறுப்பினரின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மீற்றர் வட்டியாளர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டும். இந் நடவடிக்கைகளை தன்னால் கடந்த சபையில்  கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இவ்விடயத்தில் உடனடி இடர்நிலையாகக் கருதி பிரதேச சபை உச்ச அளவில் செயற்படாவிடில் அப்பாவிகளை பாதுகாக்க முடியாதுபோகும் என்பதுடன் அநியாயமாக பலர் தவறானமுடிவுகளைக்கூட எடுக்கத்தள்ளப்படும் நிலை ஏற்படும். உடனடியாக இத் தீர்மானத்தினை முன்கொண்டு செல்லத்தக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் கோரப்பட்டது.

இத் தீர்மானத்தின் மீது உப தவிசாளர் ஜனார்த்தனன் உரையாற்றுகையில் மக்கள் தெளிவின்றி ஆடம்பரத்தேவைகளுக்காக முறைகேடான கடன்களைப் பெற்று பாரிய இடருக்கள் இகப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் உடனடி நடவடிக்கைகளுக்காக சகல தரப்புக்களும் ஒன்றினைய வேண்டும் என்றார்.

இந் நிலையில் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் விரைவான செயற்றிட்டங்களை வகுத்து செயற்படுத்தவதற்கான ஒழுங்களை கடந்த காலத்தில் இச் சபையில் மேற்கொள்ளப்பட்டமை போன்று தற்போதைய சபையில் முன்வைக்கப்பட்டுள்ள மேலதிகத் தீர்மானத்தினையும் அடிப்படையாகக் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தவிசாளர் தி.நிரோஷ்  அறிவித்தார்./