முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் மின்மாற்றி (Transformer) பொருத்தப்படாமல் முற்றுப்பெறாமல் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தட்டையமலைக் கிராமமக்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியாமல் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதுடன், காட்டுயானைகளின் அட்டகாசங்களாலும் பாதிக்கப்பட்டுவருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தட்டையமலைக் கிராமமக்களின் அழைப்பினை ஏற்று செவ்வாய்க்கிழமை (28) குறித்த தட்டையமலைக் கிராமத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அந்த மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட முத்து ஐயன்கட்டுக்குளத்தின் கீழ் ஏற்று நீர்ப்பாசனத்தினூடாக விவசாயிகளால் உப உணவுப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
குறித்த ஏற்று நீர்ப்பாசனத்திற்கென எரிபொருள் பயன்பாட்டில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், குறித்த நீர்றைக்கும் இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கும் முகங்கொடுத்துவந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் இடர்பாட்டைக் கருத்திற்கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த ஏற்று நீர்ப்பாசனத்திற்கு மின் பயன்பாட்டில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்துவதற்கும், நீர்த்தாங்கிகளை அமைத்து நீரினைச் சேமித்து ஏற்று நீப்பாசனத்தை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக முத்துஐயன் கட்டின் 4,5ஆம் வாய்க்கால் பிரிவுகளுக்கும், 6,7,8ஆம் வாய்க்கால் பிரிவுகளுக்குமே இவ்வாறு தனித்தனியே மின் பயன்பாட்டில் இயங்கும் நீர்இறைக்கும் இயந்திரங்களைப் பொருத்துவதற்கும், நீர்த்தாங்கிகளை அமைப்பதற்கும் விசேட திட்டமொன்றினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேவேளை கடந்தகாலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் விவசாயிகளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடகாலங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் 4,5ஆம் வாய்க்கால் பிரிவுகளுக்குரிய குறித்த ஏற்றுநீர்ப்பாசனத்திட்டம் முற்றுப்பெறாமல் காணப்படுவதாக விவசாயிகளால் இதன்போது முறையிடப்பட்டது.
குறிப்பாக 4,5ஆம் வாய்க்கால் பிரிவுகளுக்குரிய ஏற்று நீர்ப்பாசனத்திற்கான மின் பாவனையில் இயங்கும் நீர்இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு, நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளபோதும் மின்மாற்றி (Transformer) பொருத்தப்பட்டு மின் இணைப்புச் செய்யப்படாததால் ஏற்று நீர்ப்பாசனைத்தினூடாக பயிற்செய்கை மேற்கொள்ளமுடியாத நிலையில் அவதியுறுவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் இதன்போது கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முத்துஐயன்கட்டு குளத்தின்கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவுகளுக்குரிய இந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை முழுமைப்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் முறையிடப்பட்டபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தினர்.
எனவே முத்துஐயன்கட்டு ஏற்றுநீர்பாசனத்தினூடாக 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் தலா 03ஏக்கருடைய 24காணிகளில், அதாவது 72ஏக்கர் வரையிலான காணிகளில் உபஉணவுப் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பயிற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பாரிய வாழ்வாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
இதுதவிர தட்டையமலைக் கிராமத்தில் நீண்டகாலமாக அதிகரித்த காட்டுயானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் விவசாயிகளால் இதன்போது முறையிடப்பட்டது.
குறிப்பாக காட்டுயானைகளால் பயிர்ச்செய்கைகள் அழிக்கப்படுவதுடன், உயிராபத்து ஏற்படும் ஆபத்துக்களும் காணப்படுவதாகவும் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.
எனவே ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டை பகுதியிலிருந்து முத்துஐயன்கட்டு குளம்வரையில் 10கிலோமீற்றர் வரையிலான தூரத்திற்கு வயல் ஓரமாக யானை வேலி அமைத்தால் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 06கிராம அலுவலர் பிரிவுகளில் காட்டுயானைகளினால் ஏற்படும் பாதிப்பினை குறைக்கமுடியுமென விவசாயிகள் தெரிவித்தனர்.



இந்நிலையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த நடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் முற்றுப் பெறாதமை தொடர்பிலும், யானைவேலி அமைப்பதுதொடர்பிலும் எழுத்துமூலமான கோரிக்கைகளைத் தம்மிடம் கைளிக்குமாறும், தம்மால் உரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதுதொடர்பில் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

