அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள களைநாசனி வகைகளை கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு வர முற்பட்டபோது 119 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாக கொண்ட நிலையில் கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் பகுதியை சேர்ந்த ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
குறித்த இந்த சம்பவம் நேற்று காலை கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட களைநாசினி மருந்து வகைகள் யாழ்ப்பாணத்திலிருந்து பொதி செய்யப்பட்டு கொட்டகலை ரயில் நிலையத்திற்கு ரயிலில் ஊடாக வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவ்வாறு வரவழைக்கப்பட்ட கிருமிநாசினி பொதியினை கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து லொறி ஒன்றின் ஊடாக ஏற்றுவதற்கு முற்படும்போது அவ்விடத்திற்கு விரைந்து சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்ததுடன், பொதிகளை ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்த லொறியினையும் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை பொலிஸாரால் தொடரப்பட்ட விசாரணையை அடுத்து கிறிஸ்னஸ்பாம் தோட்டத்தில் உள்ள கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தடை செய்யப்பட்ட மருந்து வகைகள் விவசாயிகளுக்கு வழங்க தயார் செய்திருந்த மருந்து வகைகளையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மிக நீண்டகாலமாக இந்த மருந்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மருந்து வகைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அங்கு இருந்து மலையக பிரதேசத்திற்கு விநியோகிக்கப்படுகின்றது என சந்தேகிப்பதாக தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு தயாராகி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

