ஈரான் நாட்டின் 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த தேர்தலில் அதிபர் ஹசன் ரவுஹானி (வயது 68) மீண்டும் போட்டியிட்டார். மிதவாதியான அவரை எதிர்த்து இப்ராகிம் ரெய்சி என்ற மதகுரு போட்டியிட்டார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. அதிபர் ஹசன் ரவுஹானி, பிரசாரத்தின்போது தீவிர மதவாதிகளை கடுமையாக சாடினார்.
நல்லதொரு சூழல்
ஈரானில் முன்னாள் அதிபர் மகமூத் அகமதி நிஜாத் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி திட்டங்களுக்காக அந்த நாட்டின்மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருந்தன.
ஆனால், அதிபர் ஹசன் ரவுஹானி, இந்த விவகாரத்தை நிதானமுடன் அணுகினார். வல்லரசு நாடுகளுடன் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, உடன்பாடு ஏற்படுத்தி, பொருளாதார தடைகளை விலக்க வைத்தார். இதனால் மக்களிடம் அவருக்கு நல்லதொரு சாதகமான சூழல் உருவானது.
ஓட்டு எண்ணிக்கை
இந்த நிலையில் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டு போட்டனர். மொத்தம் 4 கோடியே 76 ஆயிரத்து 729 ஓட்டுகள் பதிவாகின. இவற்றில் 3 கோடியே 89 லட்சத்து 14 ஆயிரத்து 470 ஓட்டுகள் மட்டுமே செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டன.
அந்த ஓட்டுகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிபர் ஹசன் ரவுஹானி முன்னிலை பெறத்தொடங்கினார். தொடர்ந்து அவர் தனக்கு அடுத்த படியாக வந்த மதகுரு இப்ராகிம் ரெய்சியை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார்.
ஹசன் ரவுஹானி வெற்றி
ஹசன் ரவுஹானிக்கு 2 கோடியே 27 லட்சத்து 96 ஆயிரத்து 468 ஓட்டுகள் (57 சதவீதம் ஓட்டுகள்) கிடைத்தன. அவருக்கு அடுத்த படியாக வந்த இப்ராகிம் ரெய்சிக்கு 1 கோடியே 54 லட்சத்து 52 ஆயிரத்து 194 ஓட்டுகள் கிடைத்தன.
எனவே இந்த தேர்தலில் ஹசன் ரவுஹானி அமோக வெற்றி பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களில் முஸ்தபா அகா மிர்சலீமுக்கு 4 லட்சத்து 55 ஆயிரம் ஓட்டுகளும், முஸ்தபா ஹஷ்மி தாபாவுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ஓட்டுகளும் கிடைத்தன.
தோல்வியை ஒப்புக்கொண்டார் மதகுரு
இந்த அதிபர் தேர்தல் ஈரான் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டது. இப்போது ரவுஹானி வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டிருப்பது, அந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு வழி வகுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த தேர்தலில் தனது தோல்வியை மத குரு இப்ராகிம் ரெய்சி ஒப்புக்கொண்டு விட்டார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “மக்களின் முடிவை நான் மதிக்கிறேன். இந்த முடிவை நான் மட்டுமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்” என்று கூறினார்.

