வானாகிரை ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

200 0

வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஃபைல்களை மீட்கும் வழிமுறையினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் ஆராயாச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை வானாகிரை எனும் ரான்சம்வேர் வைரஸ் கடந்த வாரம் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் மூலம் பல்வேறு நிறுவனங்கள் முடங்கின.
இதுவரை மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர்கள் வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட ரான்சம்வேர் பெரும் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகளை லாக் செய்து அவற்றை விடுவிக்க பணம் கேட்டு வந்தன.
300 முதல் 600 டாலர்கள் வரையிலான பிணைத் தொகையை செலுத்த வானாகிரை ஹேக்கர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வானாகிரை மூலம் பாதிக்கப்பட்ட கணினிகளை அன்லாக் செய்யும் வழிமுறையினை கண்டறிந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லூஸ்-நிட் எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து வானாகிரை மூலம் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தரவுகளை மீட்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் கண்டறிந்துள்ள வழிமுறை சில சூழல்களில் மட்டுமே வேலை செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி வானாகிரை ரான்சம்வேர் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு கம்ப்யூட்டர் ரீபூட் செய்யப்படாமல் இருந்திருக்க வேண்டும். பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்துள்ள வழிமுறையை விரிவாக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.
வானாகீ முதற்கட்டமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழிமுறை விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் 2003 உள்ளிட்ட இயங்குதளங்களிலும் வேலை செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது நிரந்தர தீர்வாக இல்லை என்றாலும், தற்போதுள்ள சூழலில் வேலை செய்யும் ஒரே வழிமுறை இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.