அழைத்த 5 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

59 0

தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், சென்னை மண்டலத் தலைவர் எம்.முகமது பிலால் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 521 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர காலங்களில் விரைந்து சேவையாற்ற ஆயத்தமாக உள்ளன. பாதிப்பு வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் தயாராக இருப்பர்.மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருந்துப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், 108 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்துக்கு உரிய தகவல் அனுப்பப்படும். அனைத்து இலவச ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயங்களை கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் துரிதமாக செயல்பட அவசர கால 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவில் உள்ளவர்கள் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

சென்னையில் மருத்துவ உதவி கோரி அழைப்பு கிடைத்த 5-வது நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றடையும். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் 5-லிருந்து 9 நிமிடங்களுக்குள் சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது