இலங்கை-தாய்லாந்து ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

46 0

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரிய அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது.

பொறியாளர் கபில ரேணுக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்தார்.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஏ. எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனு அழைக்கப்பட்ட போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், இலங்கையர்கள் பெரும் அநீதிக்கு ஆளாக நேரிடும் என்று சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள “வெளிநாட்டு வர்த்தக தொழில் சட்டத்தின்” கீழ், அந்நாட்டின் சில வணிகத் துறைகளில் வௌிநாட்டினர் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக தாய்லாந்தில், மீன்பிடித்தல், சட்டத் தொழில், கட்டிடக்கலை, பொறியியல் போன்ற துறைகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், தாய்லாந்தில் உள்ள ஒருவர் இலங்கைக்கு வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் என்ற போதும், இலங்கையர் ஒருவர் தாய்லாந்துக்குச் சென்று அந்தத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பை இழப்பார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை இது மீறுவதாகவும் சட்டத்தரணி குற்றம் சாட்டினார்.

இதன் ஊடாக இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மீறப்படுவதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

மேலும் விளக்கமளித்த சட்டத்தரணி கனிஷ்க விதாரண, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வரி குறைப்பு என்பது பொது நிதி தொடர்பான விடயம் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அத்தகைய வரிகளில் முடிவுகளை எடுக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தை மேலும் விளக்கிய சட்டத்தரணி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில கழிவுகள் நாட்டை அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார்.