மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

52 0

மலையக பாடசாலைகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். மேலும் மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொழும்பு – அரசாங்க தகவல் திணைக்களத்தில்  புதன்கிழமை (08)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அழகான இல்லம், ஆரோக்கியமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

200 வருடகால வரலாற்றைக்கொண்ட எமது மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன மிக முக்கிய கோரிக்கைகளாக அமைந்தன.

எமது மக்களுக்காக இந்தி அரசாங்கத்தால் 10,000 வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இந்த 10,000 வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4,700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டிருந்தோம்.

இதன் முதற்கட்டமாக 2,000 பேருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியால் பண்டாரவளையில் உரித்துக்கான ஆவண கடிதங்கள் கையளிக்கப்படும். 10 பேர்ச்சஸ் காணியும், அந்த காணிக்குரிய உரித்துக்கான ஆவணக் கடிதமும் அன்றைய தினம் வழங்கப்படும்.

இந்நிகழ்வானது மலையக மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கின்றோம். மிகுதியான வீடுகளையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எமது மக்களுக்காக இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மலையக் பாடசாலைகளில் ஆரசியர் மற்றும் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

அதற்கமைய விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர். அதற்கமைய மலையக பாடசாலைகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.

மேலும் மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.