457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட செயலமர்வு

52 0

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மேற்பார்வை செய்யும் 457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகளுக்கு, பாராளுமன்றத்தில் அண்மையில் (02) விசேட செயலமர்வு நடத்தப்பட்டது.

 

இது மூன்று குழுக்களாக நடைபெற்றது.

 

கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, அரசாங்க தொழில்முயற்சிகள் திணைக்களப் பணிப்பாளர் கே.வி.சீ.தில்ருக்ஷி, தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களப் பணிப்பாளர் கே.எஸ்.எம்.டி.சில்வா, முகாமைத்துவ சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஏ.கருணாரத்ன மற்றும் ஆர்.கே.ஜயலத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

 

தலைவர் நிஷாந்த சமரவீர, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கோப் குழு குறித்து மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறை நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய பொறுப்பு இந்நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கோப் குழுவுக்கும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

இச்செயலமர்வு மூலம் பெறப்படும் விழிப்புணர்வு இதற்கு ஆரம்பமாக அமையும் என்றும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்நிறுவனங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வு வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்காத சந்தர்ப்பங்கள், சட்டங்களைப் பிழையாகப் புரிந்து செயற்படுதல், காலத்திற்கேற்ப புதுப்பிக்கத் தவறுதல் போன்ற பலவீனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சமரவீர வலியுறுத்தினார்.

 

காலாவதியான சட்ட உபபிரிவுகளை புதுப்பிக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை வழிகாட்டும் வகையில் நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஒரு வருடத்தில் அனைத்து 457 நிறுவனங்களையும் கோப் குழுவிற்கு அழைப்பது சாத்தியமற்றதால், இந்நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆண்டுதோறும் கண்காணிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் விஞ்ஞான ரீதியான அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

 

பதில் கணக்காய்வாளர் நாயகம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்துவதில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பங்கை விளக்கினார்.

 

மேலும், பெருநிறுவனத் திட்டங்கள், செயற்பாட்டுத் திட்டங்கள், நிறுவனக் கட்டமைப்பு, வருடாந்த அறிக்கைகள், பணிப்பாளர் சபை செயற்பாடுகள், வரவுசெலவு முகாமைத்துவம், பணியாளர் இணைப்பு மற்றும் வெற்றிட நிரப்புதல் ஆகியவற்றை சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

நிறுவனத் தலைவர்கள் தங்கள் சிக்கல்கள் மற்றும் முன்மொழிவுகளை கோப் குழுவிற்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. எதிர்காலத்தில் இதேபோன்ற செயலமர்வுகளை மேலும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.