ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் நியமனம்

386 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி (வயது 56) விசாரணை நடத்தி வந்தார். இந்த விவகாரத்தை அமெரிக்க பாராளுமன்றமும் ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென ஜேம்ஸ் கோமியை, எப்.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து ஜனாதிபதி டிரம்ப், சமீபத்தில் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்பின் பிரசாரத்தில் ரஷியாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றி நடக்கிற விசாரணைக்கு எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். 12 ஆண்டு காலம் ஜார்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா ஆட்சிக்காலங்களில் எப்.பி.ஐ. இயக்குனர் பதவி வகித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டீன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பொது நலன் கருதி, இந்த விசாரணையை சுதந்திரமான ஒரு வெளிநபர் கையில் ஒப்படைக்க வேண்டியதாயிற்று” என கூறி உள்ளார்.

இந்த நியமனத்தை ராபர்ட் முல்லர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “என்னிடம் அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு இந்தப் பணியை சிறப்பாக செய்வேன்” என குறிப்பிட்டார்.

ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு வக்கீல் ஒருவரை நியமித்து ரஷிய தலையீடு குறித்த விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுத்த தருணத்தில், இப்போது திடீர் திருப்பமாக ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவரது நியமனம் குறித்த உத்தரவில் அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டீன் கையெழுத்து போட்டபிறகே ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்கே தெரிய வந்ததாம்.

அதே நேரத்தில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரு கட்சிகளும் ராபர்ட் முல்லர் நியமனத்தை வரவேற்கின்றன.

இதுபற்றி டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், “எனக்கும், என் பிரசார அணிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்து, நாங்கள் குற்றமற்றவர்கள் என்று எங்களுக்கு தெரிந்த தகவலை புதிய விசாரணை உறுதிப் படுத்தும்” என கூறினார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், செனட் சபை எம்.பி.யுமான சக் ஸ்குமர் கருத்து தெரிவிக்கையில், “ராபர்ட் முல்லர் இந்தப் பணிக்கு மிகச்சரியான நபர்” என பாராட்டினார்.

செனட் சபையின் மெஜாரிட்டி தலைவர் (குடியரசு கட்சி) மிட்ச் மெக்கன்னல், “இந்த நியமனம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதி செய்கிறது” என கூறினார்.