சென்னையில் 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது: அனல் காற்று வீசியதால் மக்கள் சோர்வு

257 0

சென்னையில் நேற்று 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றால் மக்கள் சோர்வடைந்தனர். பகல் வேளையில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறது.

சென்னை நகரில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. பகல் வேளையில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறது.

ஆந்திராவின் வடமேற்கு திசையில் இருந்து வீசும் அனல் காற்றின் தாக்கத்தால் சென்னை உள்பட வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளது. கடந்த 15-ந்தேதி 108.5 டிகிரி வெயில் பதிவானது. சென்னை நகரில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக நேற்று 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது.

நேற்று காலை 7.30 மணிக்கே வெயில் சுளரென்று அடித்தது. நேரம் செல்ல, செல்ல வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அனல் காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்துசென்ற பொதுமக்களும் கடும் சோர்வடைந்தனர். முகத்தை துணியால் மறைத்தும், குடைகள் பிடித்தபடியும் சென்றபோதிலும், அனல் காற்று மக்களை வெகுவாக பதம் பார்த்தது.

வீடுகள், அலுவலகங்களிலும் மின்விசிறிகள் வெப்பக்காற்றையே உமிழ்ந்தன. குடிநீர் குழாய்களை திறந்தால் வெந்நீர் போல் தண்ணீர் கொதித்தது. வீடுகளிலும் இரவு வரை புழுக்கம் இருந்தது.

மின்சார ரெயில்கள், மாநகர பஸ்கள் இருக்கைகளும் அனலாக கொதித்தன. பயணிகள் வியர்வையில் குளித்தபடி பயணம் செய்தனர். வெப்பத்தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர், பழரசங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் கடைகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். சாலையோர கரும்பு ஜூஸ் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெருப்புபோல் சுட்டெரித்த வெயிலுக்கு பயந்து பகல் வேளையில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள் மாலை வேளையில் பூங்காக்கள், கடற்கரைகளுக்கு சென்று இளைப்பாறினர். இதனால் பூங்காக்கள், கடற்கரைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அக்னி நட்சத்திரம் 28-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே இன்னும் 10 நாட்கள் இருப்பதால் வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை நகரில் அடுத்த 2 நாட்களுக்கும் இதேபோன்று வெப்பநிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, ‘ஆந்திராவில் நிலவும் தீவிர வெப்பநிலையால், வடமேற்கு திசையில் இருந்து தொடர்ந்து தமிழகத்தை நோக்கி அனல்காற்று வீசுகிறது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி வெயில் கூடுதலாக கொளுத்தும். அனல்காற்றும் பலமாக வீசும். வெப்பச்சலனத்தால் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்’ என்றார்.

சூரியன் உக்கிரமாக காணப்படும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இளநீர், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களையும், பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி குடிநீர் அருந்த வேண்டும். தினமும் 2 வேளை குளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடித்தால் வெப்ப நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.