70 ஏக்கரை விடுவிக்க 400 மில்லியன் ரூபா கோரும் இராணுவம்!

229 0

மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த காணிகளை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை. அதனை விடுவிப்பதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா நிதி தேவை என இராணுவத்தினர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி 80ஆவது நாளாகவும் இன்று போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் நீங்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பில் நாம் இராணுவத்தினருடன் பேசியிருக்கின்றோம். இதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனும் காணி விடுவிப்பு தொடர்பில் பேசியிருந்தோம்.

இதனடிப்படையில் தற்போது இராணுவம் கூறுவதை பார்க்கின்ற போது 243 ஏக்கர் காணியை உடனடியாக அவர்கள் விடுவிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 189 ஏக்கர் காணியை விடுவிப்பதாகவும் கூறுகின்றார்கள்.

இவ்வாறாக 432 ஏக்கர் காணிகளை தவிர, 111 ஏக்கர் காணிகளை ஆறுமாத காலத்திற்குள் விடுவிப்பதாக தெரிவிக்கின்றனர். இதனை விடுவிக்க 10 கோடி ரூபா நிதி தேவை எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே இந்த காணிகளையும் பேசி விரைவாக விடுவிக்க செய்ய முடியும் என கருதுகின்றேன். அத்துடன் மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த 70 ஏக்கர் 2 றூட் காணிகளை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை.

அதனை விடுவிப்பதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா நிதி தேவை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அடிப்படையில் நாம் இராணுவ முகாமுக்குள் சென்று காணிகளைப் பார்வையிடுகின்றோம்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படின் மீண்டும் கேப்பாப்புலவு காணியை நாம் பார்வையிட வருவோம் எனவும் தெரிவித்தார்.

இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள 70 ஏக்கர் 2 றூட் காணியின் பெறுமதி தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் போராட்டதில் ஈடுபட்ட மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்,

எமது காணிகளுக்கு பெறுமதி தேவையில்லை. அவற்றின் பெறுமதி எம்மைப் பொருத்த வரை அதிகமானதே. நாம் வாழ்ந்த மற்றும் எம்மை வாழ வைத்த மண் இது.

இதனை நாம் இராணுவத்தினரிடம் வழங்கமாட்டோம். பெறுமதி கேட்டு அந்தக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எமக்கு தலைமைகள் தேவையில்லை.

எமக்கு எமது காணிகளை விடுவிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இராணுவ முகாமுக்குள் சென்று காணிகளை பார்வையிட்டிருந்தனர்.

அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரும் மக்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.