நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக எனக்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எனது கைகள் கட்டப்படவில்லை. அரசியல் தலையீடுகளுமில்லை. வழங்கிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவேன். பொதுமக்கள் பொலிஸாருக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதாள குழுக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு பொலிஸ் பிரிவுக்கு உண்டு.ஏனைய பாதுகாப்பு பிரிவுகளை காட்டிலும் பொதுமக்கள் பொலிஸாருடன் தான் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். ஆகவே பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் பொலிஸ் சேவையில் காணப்படும் வசதிகள் இலங்கையின் பொலிஸ் சேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்.பொலிஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு பல ஆண்டுகாலமாக திருத்தம் செய்யப்படவில்லை. எதிர்வரும் காலங்களுக்கான ஆட்சேர்ப்புக்காக சட்டம் திருத்தம் செய்யப்படும்.
சட்டத்தரணிகளை பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தோர் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும், பட்டதாரிகள் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அரசியல் தலையீடு ஏதுமில்லை. சட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்தவே ஆலோசனை வழங்கப்படுகிறது. எனது கைகள் கட்டப்படவில்லை. அரசியலமைப்பபின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாகவே செயற்படுவேன்.
சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக செயற்படுத்த எடுக்கும் தீர்மானங்களை பொலிஸ் அதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் முறையாக அமுல்படுத்த வேண்டும். முறையாக செயற்படாதவர்களுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

