இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்கு வருவதற்குரிய வசதிகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

46 0

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்கு வருவதற்குரிய வசதிகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதில்  இடம்பெயர்ந்தோர் பிரதிநிகளாக செயற்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தான் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20)  நடைபெற்ற  சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வறுமை ஒழிப்புக்கு அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள்  வெற்றிப்பெற்றுள்ளதா என்பதை ஆராய வேண்டும். அரசாங்கங்கள் மாற்றமடையும் போது பெயர் மாற்றத்துடன் நலன்புரி திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இருப்பினும்  சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் தீவிரமைந்துள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு சூட்டும் பெயர்களிலும் முரண்பட்ட தன்மை காணப்படுகிறது.சமுர்த்தி,அஸ்வெசும என்று பெயர் சூட்டப்படுகிறது.

அஸ்வெசும என்றால் என்னவென்பதில் பிரச்சினை காணப்படுகின்ற நிலையில் அந்த திட்டம் எவ்வாறு முழுமையாக வெற்றிப்பெறும். மூன்று இனங்களும் வாழும் நாட்டில்  அவரவர் மொழிகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்சூ  ஒருமுறை பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் எதிர்மறையான விடயத்தை குறிப்பிட்டார்.

அதன்போது அங்கிருந்தவர்களால் அது தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னர் அவர் ‘ டாம் வெனவா, டும் வெனவா’  என்று குறிப்பிட்டார். இந்த செயற்பாடு தமிழ் மொழியையும், அந்த மொழியை பேசுபவர்களையும் அவமதிப்பதாகும். ஆகவே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்பட கூடாது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து  16   ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும்   பெரும்பாலானவர்கள் இன்றளவிலும் தமது பூர்விக இடங்களில் குடியமரவில்லை. இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாக சென்றுள்ளார்கள்.

குறிப்பாக 1980 மற்றும் 1990  ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் இந்தியாவுக்கு  சென்றவர்கள் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வந்தார்கள்.  இவர்கள் இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு  முகங்கொடுத்தார்கள். பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறினார்கள்.

யுத்த காலத்தில்  இந்தியாவுக்கு  ஏதிலிகளாக சென்ற இலங்கையர்கள்  நாட்டுக்கு மீண்டும் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இவ்வாறு ஏதிலிகளாக சென்றவர்களை கைது செய்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது.இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அறிவுறுத்தியிருந்தோம்.

இலங்கைக்கு திரும்ப இணக்கம் தெரிவிக்கும்  இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்கு வருவதற்குரிய வசதிகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதில்  இடம்பெயர்ந்தோர் பிரதிநிகளாக செயற்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தான் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் என்றார்.