இவ்விஜயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
தலைமைத்துவம், கொள்கை புத்தாக்கம் மற்றும் எதிர்கால முன்னாயத்தம் என்பனவற்றில் வலுவான கவனத்தைச் செலுத்தி, பயனுள்ள மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அரச நிர்வாகத்தைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் சிங்கப்பூரில் பொதுச் சேவைத் துறையினரை தயார்படுத்தும் பணியில் இந்த சிவில் சேவைக் கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அறிவையும் அனுபவத்தையும் நமது நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்புடையதாக்கிக் கொள்வது குறித்து அறிந்து கொள்ளும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இக்கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மரியாதையுடன் வரவேற்றனர்.
பொதுக் கொள்கை அபிவிருத்தி, ஆளுகை மற்றும் அரச நிர்வாகப் பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முடியுமான பல துறைகள் குறித்த முதற்கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கையில் அரச அதிகாரிகளின் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டி, சிங்கப்பூரின் வெற்றிப் பயணத்தில் ஒழுக்க விழுமியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரச சேவை பெரும் பங்காற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய இலங்கையின் கொள்கை வகுப்பாக்கம் மற்றும் ஆளுகைச் சட்டகத்தை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூரின் சிறந்த நடைமுறைகளை இலங்கைக்கு ஏற்றாற் போல் மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

