களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க முடிவு

283 0

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலை பஸ்கள் இரண்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்து, உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், தமது அமைச்சின் செயலாளரான டப்ளியூ.எம்.பி.விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 27ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவினர் முன்வைத்த பரிந்துரைகள் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக அண்மையில் சமயங் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மீது சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, களுத்துறை சிறைச்சாலை சமையலறையில் கோவாவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டமையும் இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த விடயங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டால் பாரபட்சம் பாராது தண்டணை வழங்கப்படும் என சுவாமிநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.