கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் கைது தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யாயின், ஜனாதிபதி எனக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கலாம். ஜனாதிபதியின் ஆவேச பேச்சுக்கு அச்சமடைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். ஜனாதிபதியின் உரையை தெளிவாக அவதானித்தால் அவர் கலக்கமடைந்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் சூழ்ச்சி செய்யப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகளை தோற்கடிப்பதாகவும், இருக்கும் சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கவேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவதும், ஆளும் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்பதை வெளிப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்று ஜனாதிபதி கருதுவாராயின் அந்த சூழ்ச்சியில் முன்னிலை வகிக்க நான் தயாராகவே உள்ளேன்.
அரசாங்கத்தை கவிழ்த்து தேசியத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வரலாறு மக்கள் விடுதலை முன்னணிக்கே உண்டு. 1971, 1987, 2006 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியே சூழ்ச்சி செய்து இந்த நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி தனது உரையின்போது கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் கைது தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்களை குறிப்பிட்டார். கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்கள் பொய். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பொல்காஹெல நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்துக்கு பி அறிக்கை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வு பிரிவினர் 2010.07.25ஆம் திகதி முதல் 2011.03.30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதவியில் இருந்த கடற்படையின் தளபதி, புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னரே கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார். கைது செய்ததன் பின்னர் அவர் மீது மனித படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் தனது தவறை மறைத்துக்கொள்வதற்கு நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துகிறது.
கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் கைது தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யாயின் ஜனாதிபதி எனக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம். ஜனாதிபதியின் ஆவேச பேச்சுக்கு நான் அச்சமடைய போவதில்லை என்றார்.

