சுப்ரிம் செட் செயற்கை கோள் தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்துக்கு தெரிவித்த பதில், அவரை சிக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயலா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் பிரதமரின் பதிலுக்கு மாற்றமான கருத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க இதுதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். அல்லது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியமைக்காக அமைச்சர் பதவி விலகவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சுப்ரிம் செட் செயற்கை கோள் தொடர்பில் பிரதமரால் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்ட பதில், நாட்டில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட இதுதாெடர்பான கேள்விக்கு பிரதமர் பதிலளித்தாலும் அது பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்வி அல்ல. சுப்ரிம் செட் முதலீடு என்பது நிதி அமைச்சுடன் தொடர்பான விடயமாகும். அதன் பிரகாரம் நிதி அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் இருக்கும் முதலீட்டு சபையுடன் தொடர்பான இந்த கேள்விக்கு நிதி அமைச்சின் செயலாளர் ஹர்சன சூரியப்பெருமவே இதற்கான பதிலை தயாரித்திருக்க வேண்டும்.
அதேநேரம் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி, சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தால், அதுதொடர்பில் பதிலை வழங்குவது தொடர்பில் ஆரம்மாக அமைச்சரவையில் கலந்துரையாடி இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. என்றாலும் சுப்ரிம் செட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயற்கை கோள் முதலீட்டுக்காக முதலீட்டு சபையினால் எந்தவித பணமும் செலவிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சுப்ரிம் செட் செயற்கை கோள் முதலீடு தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்துக்கு தெரிவித்த பதிலுக்கு நேர் மாற்றமாக அமைச்சர் வசந்த சமரசிங்க மறுநாள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறும் செயலாகும். அரசியலமைப்பின் 43 2ஆம் உறுப்புரையின் பிரகாரம் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாக பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பாராளுமன்றத்துக்கு ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அதற்கு மாற்றமான கருத்தை தெரிவித்திருந்தார்.
இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் ஜனாதிபதியின் பொறுப்புக்கு கீழ் இருக்கும் ஒரு விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது, அதற்கான பதிலை ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமரே முன்வைப்பார். இந்த விடயத்தை தெரிந்துகொண்டுதான் இவ்வாறு செய்தார்களா?. அதேநேரம் அமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் ஒன்றாக இருக்கும்போது இதுதொடர்பில் கதைக்காமலா, அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரினால் தெரிவிக்கப்பட்ட பதிலுக்கு மாற்றமான கருத்தை தெரிவித்தார்?.
அதனால் வசந்த சமரசிங்க பிரதமரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இவ்வாறு செயற்பட்டாராே அல்லது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இவ்வாறு தெரிவித்தாராே தெரியாது. எனவே அமைச்சர் வசந்த சமரசிங்க தான் தெரிவித்த கருத்து தொடர்பில் தெளிவுபடுத்தி மன்னிப்பு கோர வேண்டும். அல்லது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறியமைக்காக அவர் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

