சுப்ரீம் செட் சந்ரிகா செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும், அமைச்சரொருவரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்தமையானது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் செயலாகும். இவர்கள் இருவர் கூறியதில் உண்மை எது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. இருவரில் பொய்யான கருத்தை கூறியவர் யாராக இருந்தாலும் அவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியிலுள்ள தனது இல்லத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வாரம் பாராளுமன்றம் கூடிய போது பாராளுமன்ற நிலையியற் கட்டளை, பாராளுமன்ற சம்பிரதாயம் மீறப்படுவதை தெளிவாக அவதானித்தோம். சுப்ரீம் செட் சந்ரிகா செய்மதிக்கு அரச நிதி செலவிடப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆனால் அமைச்சரொருவர் அதற்கு அரச நிதி செலவிடப்பட்டதாகக் கூறினார். நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது. அரச நிதி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இந்த செய்மதி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பினரால் இரு வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இருவரில் யார் உண்மையைக் கூறுகின்றனர் என்பதே தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினையாகும். அதனை தெரிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கமையவே எமது பாராளுமன்றத்தின் பல நிலையியற்கட்டளைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பொய் கூறுபவரால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பது பிரித்தானிய பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும். அதேபோன்று பிரதமரின் கருத்துக்கு முரணான கருத்தையும் யாராலும் கூற முடியாது என்பதும் பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களில் ஒன்றாகும்.
மூலாசனத்தினால் மாத்திரமே அதனைக் கட்டுப்படுத்த முடியும். சகல அமைச்சர்களும் பிரதமரின் கருத்துக்கு முரணான கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினால் ஆட்சி செய்ய முடியாது. இன்று எமது நாட்டு அரசாங்கத்தில் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினையாகும். ஆனால் தற்போது இதனை அதிகாரிகள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கின்றனர். அதிகாரிகள் தகவல்களை வழங்கினாலும் பொறுப்பு கூற வேண்டியது அமைச்சராகும். அதிகாரிகளால் பொறுப்பேற்க முடியாது. ஆனால் அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்கியதாகவும், வாசித்தவர்களே அதனை தவறாக வாசித்ததாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்தன.
இதற்கு முன்னர் போலி சான்றிதழ் கொண்ட ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இது யாருடைய தவறு? இதுவும் அது போன்றதொரு சம்பவம் என்றே தோன்றுகிறது. முறையாக ஆராய்ந்து பார்க்காமல் பொறுப்பின்றி இருவரும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் முழு அராசங்கமும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. இவ்வாறு பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மீறப்படும் போது அவை தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது எனது கடமையாகும் என்றார்.

