இலங்கைக்கான பரஸ்பர தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி 20 சதவீதமாக குறைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். 20 சதவீத தீர்வை வரி என்பது அரசியல் வெற்றியல்ல, நாட்டின் வெற்றி, நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இந்தியாவுடன் இலங்கை வர்த்தக தொடர்பினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கொடுக்கல் வாங்கல்களை வலுப்படுத்திக் கொண்டு, பொருளாதார பரிமாற்றத்தின் உச்சபயனை இருதரப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்தியாவுடனான பொருளாதார தொடர்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஸ்ரீ லங்கா என்பதை முன்னிலைப்படுத்தியே செயற்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை வரியானது எமது வலய நாடுகளுடன் வர்த்தக ரீதியில் போட்டியிடுவதற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் பொருளாதார ரீதியில் இலங்கை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்க நேரிட்டிருக்கும்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி இலங்கை உட்பட சகல நாடுகளுக்கும் ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஆடை உற்பத்திகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது இலங்கைக்கு இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் போட்டித்தன்மை காணப்பட்டது.இலங்கையை காட்டிலும் ஆசிய நாடுகளுக்கு பரஸ்பர தீர்வை வரியானது குறைவாக காணப்படும் பட்சத்தில் வர்த்தக பற்றாக்குறையில் நெருக்கடி ஏற்படும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
இலங்கைக்கு 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஆசிய வலய நாடுகளின் வர்த்தக போட்டித்தன்மையுடன் ஒப்பிடுகையில் இலங்கை முன்னேற்றகரமான தன்மையில் உள்ளமை வரவேற்கத்தக்கது.
வரி குறைப்பு தொடர்பில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நாட்டு மக்கள் கௌரவமளிக்க வேண்டும்.இது கூட்டு வெற்றி என்றே குறிப்பிட வேண்டும்.தீர்வை வரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படவில்லை.
20 சதவீத தீர்வை வரி என்பது அரசியல் வெற்றியல்ல, நாட்டின் வெற்றி, நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழியாகும்.நாடு என்ற அடிப்படையில் வலய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.மூடிய நிலையில் இருந்துக் கொண்டு தற்போது செயற்பட முடியாது.
இந்தியாவுடன் இலங்கை வர்த்தக தொடர்பினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்தியாவுக்கு 25 சதவீத வரியும்,இலங்கைக்கு 20 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கொடுக்கல் வாங்கல்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார பரிமாற்றத்தின் உச்சபயனை இருதரப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

