வடக்கு ரயில் பாதை புதுப்பித்தலின் போது மஹாவ மற்றும் அனுராதபுரம் இடையேயான ரயில் நிலையங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி டொக்டர் நலிந்த ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய வழக்கில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்திய கடன் உதவியின் கீழ் வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கலின் போது, மஹாவ மற்றும் அனுராதபுரம் இடையேயான ரயில் நிலையங்களை மேம்படுத்துவதில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

