மாலைதீவுக்கு பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார

69 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (28)  மாலைதீவு பயணமானது.

இன்று (28) முதல் 30ஆம் திகதி புதன்கிழமை வரை இவ்விஜயம் அமையவுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸூவின் அழைப்பிற்கமையவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலதீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 60ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழவின் இந்த அரசுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு வர்த்தக மாநாட்டிலும் சிறப்புரையாற்றவுள்ளார்.

அதற்கு மேலதிகமாக வெளிநாட்டு வர்த்தக குழுக்களையும் ஜனாதிபதி சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடனான இந்த விஜயத்தில் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.