தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகித்த நீதியரசர் பாராளுமன்ற சிறப்பு குழுவின் தலைவராக செயற்பட்டு, தேசபந்து தென்னகோனை பதவி நீக்குமாறு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தேசபந்து தென்னகோன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய கல்வி மறுசீரமைப்பு தேசிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது. கல்வி மறுசீரமைப்பு மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் இலவச கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் விடுதலை முன்னணி இந்த போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தது.தற்போது அந்த கோரிக்கைளை அவர்கள் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை வினவ வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் வரலாறு மற்றும் அழகியற் கல்வி ஆகிய பாடங்கள் தெரிவு பாடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தமது நாட்டின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கிறது. நாட்டின் மீது பற்று தோற்றம் பெற வேண்டுமாயின் வரலாறு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். அழகியற் கல்வி தமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆகவே இவ்விரு பாடங்களை காட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
உத்தேச கல்வி மறுசீரமைப்புக்கு அரசாங்கம் வினைத்திறனான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.மாறாக குழுவின் பரிந்துரையை வைத்துக் கொண்டு மறுசீரமைப்பை எவ்வாறு முழு கல்வி துறையையும் மாற்றியமைக்க முடியும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் கல்வி மறுசீரமைப்புக்கு விசேட கவனம் செலுத்தினார்.இதற்காக 12 நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் குழுவை நியமித்து பெற்றுக்கொண்ட அறிக்கையை மீளாய்வு செய்து ‘உயர்கல்வி ஆணைக்குழு’சட்டமூலத்தை தயாரித்தோம்.இருப்பினும் பல்வேறு காரணிகளால் இந்த சட்டமூலத்தை எம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனது.
இலங்கையில் அரச பாடசாலை ,அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மற்றும் சர்வதேச தனியார் பாடசாலைகள் என்று பாடசாலைகள் உள்ளன.தனியார் சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் கிடையாத காரணத்தால் நடுத்தர மக்கள் சர்வதேச பாடசாலைகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள். உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலத்தில் சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தோம்.
முன்பிள்ளை கல்வி, ஆரம்ப கல்வி பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் கிடைத்தால் அந்த பிள்ளையின் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட கல்வி சிறந்ததாக அமையும்.இதற்கான ஏற்பாடுகளையும் உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்கியிருந்தோம்.உண்மையில் கல்வித்துறையில் மறுசீரமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அரசாங்கம் உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றலாம்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து விதப்புரைகளை நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்புக்குழுவின் செயற்பாடு தொடர்பான சட்டசிக்கலை இதற்கு முன்னரும் குறிப்பிட்டிருந்தேன்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்பட்ட சிபாரிசு மற்றும் வழங்கப்பட்ட அனுமதி ஆகியவற்றை சவாலுக்குட்படுத்தியே உயர்நீதிமன்றத்துக்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக பதவி வகிப்பதை இடைநிறுத்தி தீர்ப்பளித்தது.இந்த மூவரடங்கிய குழுவில் அங்கம் வகித்த நீதியரசர் தலைமையில் தான் பாராளுமன்ற சிறப்பு விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது.
பாராளுமன்ற சிறப்புக்குழு தேசபந்து தென்னக்கோனை குற்றவாளியாக நிரூபித்து அவரை பதவி நீக்குவதற்கு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நீதித்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கும் முரண்பாடான தன்மை ஏற்பட்டுள்ளதை இந்த செயற்பாடு வெளிப்படுத்துகிறது.தேசபந்து தென்னக்கோன் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கருதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்யலாம் என்றார்.

