போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பரவாமல் தடுக்க வேண்டும்-தமிழிசை

291 0

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பரவாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம் நேற்றே தொடங்கி பொதுமக்கள் பாதிப்பு அடைவது ஏற்புடையது அல்ல. அதே நேரத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும்.

சுமார் 1.5 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது சரியே, அதே வேளையில் அரசு பேருந்தில் தினசரி பயணிக்கும் பல லட்சம் பொதுமக்கள் நலனும் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? நாளை(இன்று) முதல் போராட்டம் என்று அறிவித்து விட்டு நேற்றே திடீரென பொதுமக்களை நடுவழியில் குழந்தை குட்டிகளோடு இறக்கி விட்டு பரிதவிக்க விடுவது என்ன நியாயம்.

கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை விட தீவிரமாக போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலே அதிகம் நாட்டம் கொண்டவர்கள். அவர்கள் தொழிற்சாலைகளை இயங்கவிடமாட்டார்கள், பேருந்துகளை ஓடவிடமாட்டார்கள், புதிதாக நிறுவனங்களை நிறுவ விடமாட்டார்கள், இருக்கும் தொழிலாளர்களையும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள், ஆக உள்நோக்கமுள்ள இவர்களது பின்புலத்தை அரசு கவனித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களை போராட்டம் நடத்த விட்டு விட்டு பின்பு நடவடிக்கை எடுப்பதை விட போராட்டம் நடைபெறாமல், பரவாமல் பார்த்துக்கொள்வது தான் அரசாங்கம் மக்களுக்கு செய்யும் கடமையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.