சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்: குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம்

332 0

சென்னை மக்களுக்கு முதல் சுரங்க மெட்ரோ ரெயில் பயணம் ‘திகில்’ அனுபவமாக அமைந்தது. குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல் நாளில் இலவசமாக ரெயிலில் பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடப்போகிறது என்று அறிவிப்பு வெளியான போதே, பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. சுரங்கப்பாதையில் ரெயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதால், சுரங்க ரெயில் போக்குவரத்து தொடங்கும் நாளை எதிர்பார்த்து பலர் காத்திருந்தனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. காலை 11 மணிக்கு திருமங்கலத்தில் இருந்து முதல் ரெயில் நேரு பூங்கா நோக்கி புறப்பட்டது. அதில், மெட்ரோ ரெயில் ஊழியர்களின் குடும்பத்தினரே அதிகம் இருந்தனர். தொடர்ந்து வந்த மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பயணம் செய்தனர்.

மூன்றாவதாக வந்த மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, திருமங்கலம் ரெயில் நிலையத்திற்கு பலர் குடும்பத்தோடு உற்சாகமாக வந்திருந்தனர். முதல் நாள் பயணம் என்பதால், இலவசமாகவே மெட்ரோ ரெயிலில் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மெட்ரோ ரெயிலில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இலவச பயணத்தை கேள்விப்பட்டு, பலர் திருமங்கலம் ரெயில் நிலையத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். அதேபோல், தொடர்ந்துள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கும் பொதுமக்கள் வந்தனர். ஆனால், திருமங்கலத்தில் புறப்பட்ட மெட்ரோ ரெயில் நேராக நேரு பூங்கா ரெயில் நிலையம் சென்று தான் நின்றது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ரெயிலும் நேராக கோயம்பேடு சென்று தான் நின்றது. இதனால், வழியில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருமங்கலத்தில் புறப்பட்ட மெட்ரோ ரெயில் 7 நிமிடங்களில் நேரு பூங்காவை சென்றடைந்தது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணித்த பொதுமக்களுக்கு இது திகில் அனுபவமாக அமைந்தது.

சுரங்கப்பாதை பயண அனுபவம் குறித்து, மெட்ரோ ரெயிலில் பயணித்த பொதுமக்கள் சிலர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரத்தை சேர்ந்த லதா:-

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது இதுதான் முதன் முறை. இதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருக்கிறேன். சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது, நல்லதொரு அனுபவமாக இருந்தது. மகிழ்ச்சியான பயணமாக அமைந்தது. ஆனால் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம்தான் அதிகமாக உள்ளது. இந்த கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். அதிகமானவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த காயத்ரி:-

சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் எப்படி செல்கிறது? என்பதை பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக மிகவும் ஆவலாக இருந்தேன். இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குடும்பத்தோடு வந்தோம். என்னுடைய கணவர் தர்மேந்திரன் பணியாற்றும் கம்பெனியில் தான், இதற்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. சுரங்கப்பாதை ரெயில் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கீழானூரை சேர்ந்த தியாகராஜன்:-

முதல் முறையாக குடும்பத்தோடு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தோம். குளுகுளு வசதி, குகைக்குள் செல்வது போன்ற திகிலான உணர்வுடன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆனால் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணத்தை குறைத்தால் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். ஆகவே கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நிர்மலா:-

மெட்ரோ ரெயிலில் ஏறியதும் தெரியவில்லை, இறங்கியதும் தெரியவில்லை. அவ்வளவு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுபோன்ற ஒரு பயணத்தை நான் மேற்கொண்டது இல்லை. ஊட்டி மலை ரெயில் பயணத்தை நினைவுகூரும் வகையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பயணம் அமைந்தது.

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு பயணி வானதி:-

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் செல்லும் அழகே சிறப்புதான். சுரங்கப்பாதையின் உள்ளே செல்லும்போதும், அதில் இருந்து வெளியே வரும்போதும் பிரமிப்பாக உள்ளது. குடும்பத்தோடு வந்தோம். குழந்தைகளும் மெட்ரோ ரெயில் பயணத்தை குதூகலத்துடன் கொண்டாடினார்கள். மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

அண்ணாநகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பிரதிஷா:-

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் குடும்பத்தோடு சென்றோம். அதன்படி ரெயில் பயணம் மிகவும் திகிலானதாக இருந்தது. முழுவதும் குளுகுளு வசதிகளுடன் மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.

அண்ணாநகரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஐஸ்வர்யா:-

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணம் மிகவும் நன்றாக இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழகத்துக்கு இந்த சிறப்பான சேவை கிடைத்துள்ளது. செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் ரெயில் நிலையத்தில் உள்ளே இருந்துகொண்டு யாரையும் தொடர்புகொள்ளமுடியவில்லை. செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பஸ் கட்டணம் போல் மெட்ரோ ரெயில் கட்டணத்தையும் குறைத்தால் அதிகமானோர் பயணம் செய்வார்கள்.

சைதாப்பேட்டையை சேர்ந்த 12 வயது சிறுமி மதுமித்ரா:-

சுரங்கப்பாதை மெட்ரோ ரெயிலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் என்னுடைய குடும்பத்தோடு பயணம் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மெட்ரோ ரெயில் சென்றபோது ஒரே இருட்டாக இருந்தது. ஆனாலும் அதை பார்த்து நான் பயப்படவில்லை. மீண்டும் ஒரு முறை பயணம் செய்யவேண்டும் என்று ஆசையை தூண்டுவதாக உள்ளது. பள்ளிக்கு சென்றதும், என்னுடைய தோழிகளுடன் மெட்ரோ ரெயில் பயண அனுபவம் குறித்து கூறுவேன்.

கொடுங்கையூரை சேர்ந்த ஆர்.எம்.ஹனீபா:-

சுரங்கப்பாதை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது ஒரு புதிய அனுபவம். மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், சாதாரண மக்களால் பயணம் செய்யமுடியாத சூழல் உள்ளது. ஆகவே மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகளையும் வழங்கவேண்டும். சென்னையை போன்று நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த சேவை தொடங்கவேண்டும்.