தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பெண்ணை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கைதுசெய்ய்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மே மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (14) கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

