துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடியபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நிச்சயமாக இந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44 பேர் இங்கிருந்து பணி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4 ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்துள்ளனர். 40 ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்கள் காணப்படுகின்றன. மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். எனவே, இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது 40 ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காத நிலையில், துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கிறது. இதனால் துணுக்காய் வலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான சூழ்நிலையே காணப்படுகிறது.
எமது பிள்ளைகளும் கல்வி கற்கவேண்டும். வன்னி என்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலைமை, முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை, துணுக்காய் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
மேலும், இப்பிரச்சினை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்னார், முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.
அந்தக் கூட்டத்திலும் மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்றுச் சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள் சென்று, தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன்போது ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை முன்னெடுக்க வேண்டுமென முசலி பிரதேச அபிவிருத்திக் குழுவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

