மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மன்னார் – முருங்கன் பகுதியில் மோட்டார் சைக்கிள், கெப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய் மற்றும் சகோதரி காயமடைந்துள்ளதுடன் 04 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஒரே குடும்பத்த்தை சேர்ந்த நால்வரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கதிர்காமம் – கோனகங்கார பகுதியில் முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு சிறுவர்கள் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பிபிலையைச் சேர்ந்த 15 வயதுடையவர் ஆவார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

