கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-மந்திரிக்கு கவர்னர் கண்டிப்பு

242 0

கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி பதவி ஏற்றபிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் மோதல் நடப்பது தொடர் கதையாக உள்ளது.

பல நேரங்களில் இந்த மோதல்கள் கொலையில் முடிவதால் இவர்கள் மோதலுக்கு ஒரு முடிவு ஏற்படாமல் உள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில்தான் அதிகளவு அரசியல் மோதல்களும், கொலைகளும் அரங்கேறி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிஜூ என்பவர் கண்ணூர் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதால் அங்கு பாரதிய ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான ஓ.ராஜகோபால் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் கேரள கவர்னர் சதாசிவத்தை நேரில் சந்தித்து மாநில அரசு மீது புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றபிறகு கேரளாவில் 500-க்கும் மேற்பட்ட அரசியல் மோதல்களும், 14 கொலைகளும் நடந்துள்ளது. மாநில அரசே இந்த வன்முறைகளை தூண்டி விடுவதால் கண்ணூர் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து ஆயுதபடைகள் சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் இதுபற்றி தான் விசாரித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக அவர்களிடம் உறுதி அளித்தார். மேலும் மாநில அரசுக்கு பாரதிய ஜனதாவின் புகார் மனுவை உடனடியாக அனுப்பி வைத்த கவர்னர் சதாசிவம் மாநிலத்தில் நடைபெறும் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் பொதுமக்கள் அமைதியாக வாழ்க்கை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கண்ணூர் வந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாரதிய  ஜனதா தொண்டர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது கேரளாவில் சட்டம் ஒழுங்கை மாநில அரசு உடனே நிலைநாட்ட வேண்டும். கேரளாவில் நடைபெறும் அரசியல் மோதல்கள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.