சப்ரகமுவ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள எம்பிலிப்பிட்டிய, சீதாவாக்கபுரம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோ 235 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 01 கிராம் 238 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 19 கிலோ 605 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 77 லீற்றர் 251 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 16 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

