‘ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்’ என்று சொல்வார்கள். இதனை அரசியலில் தெளிவாகக் காணலாம். இன்று ஒரு கட்சியில் இருப்பவர் நாளை இன்னுமொரு கட்சிக்கு தாவிவிடுவார். பதவியும், பணமும்தான் அவர்கள் இருக்கின்ற கட்சியை தீர்மானம் செய்கின்றன. இந்த போக்கு முஸ்லிம் அரசியலில் நிறைந்து காணப்படுகின்றது. இதற்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மட்டுமன்றி கட்சிகளின் தலைவர்களும் சோரம் போயுள்ளார்கள்.
இந்த ரோசம் கெட்ட வேலைகளினால் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் சுய அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுகை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாத வரை முஸ்லிம்களின் அரசியல் பிழையான பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தேர்தல் என்று வந்தால் முஸ்லிம் கட்சியினர் ஆளுக்கு ஆள் வசை பாடுவார்கள். சமூகத் துரோகி என்றெல்லாம் திட்டிக் கொள்வார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் எடுத்துக் கொண்டால் நிரந்தரமான கொள்கை என்று எதுவும் கிடையாது. தங்களின் இலாபத்துக்கு ஏற்ப பேசிக் கொள்வார்கள். கூட்டு வைத்துக் கொள்வர்கள். பிரிந்து கொள்வார்கள். பிரிந்தவர் மீண்டும் இணைந்து கொள்வார். வசைபாடுதல்களும், புகழ்ந்துரைப்பதும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பழகிப் போனதாகும்.
முஸ்லிம் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வறுத்தெடுத்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப். அவர் கடந்த 25ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சிலரினதும், ஆதரவாளர்கள் பலரினதும் எதிர்ப்பையும் கடந்தே முஷாரப் முதுநபீனை ரவூப் ஹக்கீம் கட்சியில் இணைத்துள்ளார்.
அரசியல் ஆட்டத்தில் ரவூப் ஹக்கீம் வல்லவர் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ரவூப் ஹக்கீம் தமது கட்சியில் முஷாரப்பை இணைத்துக் கொண்டமை தம்மை படுமோசமாக விமர்சனம் செய்த முஷாரப்பை பழி தீர்த்துக் கொள்வதற்காகது. அல்லது கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவா என்பதற்கு காலம்தான் பதில் தரும்.
முஷாரப், தமது அரசியலை 2020இல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஆரம்பித்தார். ரிஷாட் பதியூதின் கருணையால்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அவர் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகளையும் படுமோசமாக விமர்சனம் செய்தார். அரச தொலைக்காட்சியில் வேலை செய்த தன்னை பணி நீக்கம் செய்வதற்கு ரவூப் ஹக்கீம் காரணமென்றும் கூறினார். பதியூதீனை அளவுகடந்து புகழ்ந்து பேசினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முஷாரப், பின்னர் அக்கட்சியின் தீர்மானங்களுக்கு மாற்றமாக செயற்பட்டார். கட்சியின் தலைமையையும், கட்சியையும் விமர்சனம் செய்தார். அக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குள்ளானார். இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து செயற்பட்டார். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர்களையும் விமர்சித்தார்.
கோட்டாபய ஜனாதிபதி பதவியை இழந்த போது, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டார். இதன் போது ராஜபக் ஷக்களையும், முஸ்லிம் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் எள்ளிநகையாடி விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எந்த பேரினவாதக் கட்சிகளும், தலைவர்களும் வேண்டாம், இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் வேண்டாம் என்று தெரிவித்து, புதிய தலைமுறைக் கழகம் எனும் கட்சி ஒன்றினை ஆரம்பித்தார். பின்னர் அதனை கைவிட்டார்.
பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் தமது தலைமையில் சுயேச்சை குழு ஒன்றை போட்டியிடச் செய்து 08 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டார். ஆயினும் அவரால் தனித்து அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பொத்துவில் பிரதேச சபை 20 உறுப்பினர்களைக் கொண்டது. அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். இதனால், தான் தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்கும், எதிர்கால அரசியலுக்கும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதே சிறந்ததென்று முஸ்லிம் காங்கிரஸில் சரணடைந்து கொண்டார்.
மறுபுறத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், முஷாரப்பை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்ட நிலையில் தன்னை கடுமையாக விமர்சனம் செய்த முஷாரப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். முஷாரப்’ தமது எதிர்கால அரசியலுக்கு ரவூப் ஹக்கீமுடன் இணைந்து, ரவூப் ஹக்கீமை விட சிறந்த முஸ்லிம் தலைவர் கிடையாது என்று தன்னுடைய கடந்த விமர்சனங்களையும் கவனத்திற் கொள்ளாது அளவு கடந்து புகழ்ந்து கொண்டார்.
அதுமட்டுமன்றி முஷாரப்’ தலைமையிலான சுயேச்சைக் குழுவினரும், முஷாரப்பும் முஸ்லிம் காங்கிரஸோடு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு, தாங்கள் எல்லோரும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று ஒப்பமிட்டு, ஒப்புதல் அளித்துள்ளனர்.
எனவே, இனிவரும் நாட்களில் முஷாரப்பின் தலைமையில் இணைந்து கொண்ட பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் செயற்பட வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாது, சில வேளைகளில் அவர்களின் உறுப்பினர் பதவியையும் பறிக்கும் அதிகாரமும் முஸ்லிம் காங்கிரஸுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், முஷாரப்பும், அவரின் தலைமையிலான குழுவினர்களும் ஒரு பொறிக்குள் மாட்டியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைந்து கொண்டதன் மூலமாக முஷாரப்புக்கு மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸுக்கும் நன்மைகள் உள்ளன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரானவர்களின் எண்ணத்தில்தான் மண் விழுந்துள்ளது.
எவ்வாறெனினும் முஷாரப் பொத்துவில் பிரதேசத்தில் தமக்கென்று ஒரு வாக்குப் பலத்தைக் கொண்டுள்ளார். தனது கட்சி மாற்றங்கள், முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துக்கள் யாவும் பொத்துவிலுக்காக என்று அங்குள்ள மக்களை நம்ப வைத்துள்ளார். இதனால்தான் பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டு 8500 வாக்குளையும், 08 உறுப்பினர்களையும் பெற்றுள்ளார். இந்தளவு தனிப்பட்ட வாக்குப் பலம் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றவர்களில் பலருக்கு கிடையாது.
இதவேளை பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 5 உறுப்பினர்களை பெற்றது. இந்த 5 உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி சுமார் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முடிந்த நிலையில்தான் முஷாரப்’ முஸ்லிம் காங்கிரஸில் இணையும் முடிவுக்கு வந்தார்.
முஷாரப்பை கட்சியில் இணைத்துக் கொள்வதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் ஒருவராவார். பொதுத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் போட்டியிட முடியாதென்று கொடி பிடித்தவர்களில் உதுமாலெப்பையும் ஒருவராவார்.
ஹரீஸ் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியவர். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாதென்று தடுத்தனர். இந்த எதிர்ப்புக் குழுவில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் போன்றவர்களும் இருந்தனர். ஆனால், முஷாரப்பும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியவர். அவ்வாறு இருக்கின்ற போது ஹரீஸிற்கு காட்டிய எதிர்ப்பை, முஷாரப்பை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு காட்டாது விட்டது ஏன் என்ற கேள்வியும் உள்ளது.
முஷாரப்பை இணைத்துக் கொள்வதற்கு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான வாஸித் கடும் எதிர்ப்புக்களை காட்டிய போதிலும், தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்படும் என்று ரவூப் ஹக்கீம் கூறியபின் தமது எதிர்ப்பை கைவிட்டுள்ளார்.
இங்கு கூட பதவிதான் எதிர்ப்பையும், ஆதரவையும் தீர்மானம் செய்துள்ளது. இதே வேளை, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக முஷாரப் 27ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஆதலால், முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இதர முஸ்லிம் கட்சிகளும் பதவிகளை மையப்படுத்திய அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன. அதனையே முஷாரப்பும் செய்துள்ளார்.

