கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்றும் அதன் அகழ்வு பணிகள்.
உங்களிற்கு தெரியும் 1996ம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி என்கின்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தவர்கள் அயல்வீட்டுக்காரர் என பலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நேரடியாக சாட்சியம் வழங்கினார்.
இந்த கொலைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இந்த கொலையுடன் தொடர்புபட்ட அந்த குற்றவாளி,நேரடியாக இராணுவதரப்பை நோக்கி குற்றம் சுமத்துகின்றார்.
இதேபோல 500 முதல் 600 வரையிலான நபர்களை நாங்கள் இங்கே கொன்று புதை;திருக்கின்றோம் , இதனை செய்யுமாறு எங்களிற்கு அன்று கூறியவர்கள் அன்று அந்த இடத்திலிருந்த உயர் அதிகாரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.
எனவே இவர்களின் கைதுகளின் பின்னர் அந்த உயரதிகாரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.அன்று அங்கு கடமையாற்றியவர்கள் இருந்தவர்கள் எல்லாம் இன்றும் இராணுவத்தில் இருக்கின்றார்கள்.
சிலர் இராணுவத்தின் பெரிய பதவிகளை பெற்றிருக்கின்றார்கள் அவ்வேளை பொறுப்பதிகாரிகள் தரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கின்றனர்.
அன்று இலங்கையின் முப்படை தளபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்க இன்றும் இங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
எனவே இவற்றிற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மேல் உடனடியாக தீவிரமான விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

