மோடியுடன் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக்ஷ, ஜி.எல் பீரிஸ் சந்திப்பு!

227 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பீரிஸ்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது. எமது ஆட்சியில் இந்தியா எமக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கிய நட்புறவு நாடாகும்.

அதேபோல் இப்போதும் அவர்களது உறவு முறையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆகவே நாம் கடந்த காட்சியில் கையாண்ட நட்புறவை தக்கவைக்கும் வகையில் இந்த சந்திப்புகளை கோரியிருந்தோம். அதற்கமைய நேற்று பின்னிரவு எமக்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் தமது ஆட்சியிலும் அதேபோல் நிகழ்கால ஆட்சியில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் அமைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்க்கத்தக்கது. முன்னைய ஆட்சியில் இந்தியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மிகவும் நெருக்கடியான கால சூழலில் எமக்கு இந்த சந்திப்புகளை இந்திய தூதரகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமான வகையில் அமைந்தது என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வெசாக் வாரத்தை முன்னிட்டு இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நள்ளிரவு மகிந்த ராஜபக்ச தரப்பினர் சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.