தேசபந்து தென்னக்கோனின் துர்நடத்தை தொடர்பான விசாரணையில் மேலும் மூன்று பேர் சாட்சியமளிப்பு

86 0

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் மேலும் மூன்று சாட்சிகள் திங்கட்கிழமை (16) சாட்சியமளித்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி.இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடக்கிய குழு திங்கட்கிழமை (16) பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது, மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணிவரை இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி நான்கு பேர் சாட்சியளிப்பதற்கு குழு முன்னிலையில் ஆஜராகியிருந்ததுடன், இதில் ஒரு சாட்சியை அன்றையதினம் பூர்த்தி செய்ய முடியாமல் போயிருந்தது.

இதனால், குறித்த சாட்சியாளர் நேற்று (16) குழு முன்னிலையில் ஆஜராகித் தனது சாட்சியத்தை வழங்கியிருந்தார். இதனைவிடவும் மேலும் மூன்று சாட்சிகள் சாட்சியளித்தன.

இதன்போது, விசாரணைக் குழுவும், சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணையில் பங்கெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோரும், பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ்.வீரவிக்ரம ஆகியோரும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதுவரை, ஏழு சாட்சிகள் இதுவரை சாட்சியளித்திருப்பதுடன், இந்தக் குழு செவ்வாய்க்கிழமை (17) 9.30 மணிக்கு மீண்டும் கூடி விசாரணைகளைத் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.