உங்களது கடினமான உழைப்பை நான் பாராட்டுகின்றேன்- மலையகத்தில் மோடி

224 0

பன்முகத்தன்மை என்பது கொண்டாடுவதற்காகவே அன்றி மோதலுக்காக அல்ல என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரித்தாளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த இந்திய பிரதமர் மோடி இன்று காலை மலையகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

அவரின் இந்த விஜயத்தின் ​போது, ஆய்வுகூடம் சத்திரசிகிச்சை பிரிவு உள்ளடங்கிய 150 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் உள்ள டிக்கோயா வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார போசாக்கு மற்றும் வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

150 வருட கால பழைமைவாய்ந்த இவ்வைத்தியசாலை இந்தியா மற்றும் இலங்கையின் நிதியுதவியுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நோர்வூட் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பெருந்திரளான பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினர். அவரின் உரையில் மேலும் கூறியதாவது,

தற்போது மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் நடைமுறையில் உள்ள 1990 அவசர அம்பியூலன்ஸ் ​​அவசர சேவையை ஏனைய மாகாணங்களுக்கும் விரிவு படுத்துவதாக கூறினார்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை உலகத்துக்கு பரிசளித்துள்ளீர்கள் என்று மோடி குறிப்பிட்டார்.

தற்பொழுது மலையக மக்களுக்காக 4000 வீடுகளை கொண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மலையகத்துக்கு, மேலும் 10 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

உலகின் தேயிலை தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்களிப்பை இலங்கை வழங்கிவருகின்றது. உங்களது இந்த கடினமான உழைப்பை நான் பாராட்டுகின்றேன். ஆனால் இதனை சர்வதேசம் அறியாது என்று பிரதமர் மோடி தனதுரையில் மேலும் கூறினார்.