நரேந்திர மோடியை மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

220 0

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவில் குறிப்பிட்ட சில தரப்பினரை மாத்திரம் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த சந்திப்பு பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை கொழும்பு வந்த இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, இந்தியத் தூதுவர் ஊடாக மகிந்த ராஜபக்ச கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இதற்கமைய, நேற்று பின்னரவு மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்றதாக இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

கொழும்பில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த மே நாள் பேரணியில், கூட்டு எதிரணியின் தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச, இந்தியப் பிரதமருக்கு கருப்புக்கொடி காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்து 10 நாட்களின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.