மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த நினைத்தால் அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்: வைகோ

340 0

பெண்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘டாஸ்மாக்’ வியாபாரத்தை எப்படியாவது தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட-கிராம சாலைகளாக மாற்றுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது. இதனால் மாற்று இடங்களில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புகள் கடுமையாகி, போராட்டங்கள் வெடித்துள்ளன.

பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அலட்சியப்படுத்தி, போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவி இப்போராட்டங்களை நசுக்கி விடலாம் என்று தமிழக அரசு கருதுகிறது. ஆனால், பொதுமக்களும் பெண்களும் மதுக்கடைகளை சூறையாடி வருகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை பற்றி கவலைப்படாமல் ‘டாஸ்மாக்’ நிறுவனம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிதாக கடைகளைத் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குடியிருப்புப் பகுதிகளுக்குள் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. தங்களது கிராமத்திற்குள் மதுபானக் கடை திறக்கக்கூடாது என்று கிராம சபைகளில் தீர்மானம் இயற்றினால், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது. மேலும் மதுக்கடைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தும் மக்களை கைது செய்யவோ, தடியடி உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவோ கூடாது”, என்று உத்தரவிட்டனர்.

பொதுமக்களின் நலனுக்காக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுகளை செயல்படுத்தாமல், அவற்றை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக மக்கள் குறிப்பாக, பெண்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.