அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

225 0

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, காமராஜ், எம்.சி.சம்பத், சரோஜா, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் 7.30 மணியளவில் முடிந்தது. இந்த கூட்டத்தில் டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான கூட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் என்னென்ன கருத்துக்களை முன் வைப்பது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடுத்துள்ள ஊழல் புகார் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிக்கிறது.’ என்றார். அப்போது அவரிடம், அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி சுமத்தி உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து கூறும்போது, ‘இது கட்சி சம்பந்தமான கூட்டம். எனவே கட்சி நடவடிக்கைகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. வேறு எதுவும் ஆலோசிக்கப்படவில்லை.’ என்றார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம், ‘அதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் மவுனமாக புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் இன்று நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வேணுகோபால் எம்.பி., ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.