சீன அதிபர் ஜின் பிங்குடன் தென்கொரிய புதிய அதிபர் தொலைபேசியில் பேச்சு

342 0

சீன அதிபர் ஜின் பிங்கை, தென்கொரிய புதிய அதிபர் மூன் ஜே இன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இரு தலைவர்களும் 40 நிமிடம் பேசிக்கொண்டனர்.

தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே இன் நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் உலகத்தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
முதலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது வடகொரியாவின் அணு ஆயுத விவகாரத்தை இரு தரப்பும் நெருங்கி வந்து கையாளவும், ஒத்துழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின் பிங்கை, மூன் ஜே இன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இரு தலைவர்களும் 40 நிமிடம் பேசிக்கொண்டனர்.

இந்த உரையாடலின்போது, இரு தலைவர்களும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடச்செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க ஒப்புக்கொண்டனர்.இருதரப்பிலும் சிறப்பு தூதர்களை அமர்த்தவும் முடிவு செய்தனர்.

தென்கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ள தாட் என்னும் ஏவுகணை தடுப்பு அமைப்பு பற்றியும், வடகொரிய அணு ஆயுத விவகாரங்கள் குறித்தும் மட்டுமே விவாதிப்பதற்கு சிறப்பு குழு ஒன்றை அனுப்பி வைக்கும் யோசனையை சீன அதிபர் ஜின் பிங்கிடம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது சீனாவுக்கு வருகை தருமாறு மூன் ஜே இன்னுக்கு ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடனும் மூன் ஜே இன் தொலைபேசியில் பேசினார். ஆனால் இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டனர் என்பது தெரியவரவில்லை.