தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

252 0

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்த வெயிலின் அளவே அக்னி நட்சத்திரத்தின் போதும் நீடித்தது. கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக இருந்தது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தென் தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 13 சென்டி மீட்டரும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம், மதுரை மாவட்டம் திருமங்கலம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் 1 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் வடதமிழகம் முதல் குமரிக்கடல் பகுதி வரை நிலவுகிறது. இதனால் தென்மாவட்டம், உள்மாவட்டம் மற்றும் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, தேனி போன்ற மலைப்பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்னும் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.