மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

344 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிர போராட்டம் 80 ஆவது நாளான இன்றும் இடம்பெற்று வருகின்றது.

தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 80 ஆவது நாளான இன்று, முடிவிலியாக தொடரும் போராட்டம் என்னும் தொனிப்பொருளில் சத்தியாக்கிரக போராட்டத்தினை பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கான தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அதற்கான முழு வீச்சு இல்லாத நிலையே இருந்து வருகின்றது. எனவே இது தொடர்பில் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கான நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்காமல் பட்டதாரிகளின் உண்மையான பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது போராட்டத்தின் நியாயத்தினை உணர்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் தமக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.