தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி ஒன்று திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பஞ்சவர்ணக்கிளியின் பெறுமதி 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான பஞ்சவர்ணக்கிளி ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர், பஞ்சவர்ணக்கிளிகள் வைக்கப்பட்டிருந்த கூண்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு மிருகக்காட்சி சாலையின் உயர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
மிருகக்காட்சி சாலையின் உயர் அதிகாரி அது குறித்து தேடிப்பார்த்த போது, கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி ஒன்று திருடப்பட்டுள்ளமை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து மிருகக்காட்சி சாலையின் உயர் அதிகாரி இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அந்த கூண்டினுள் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான 30 பஞ்சவர்ணக்கிளிகள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டிலும் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான பஞ்சவர்ணக்கிளி ஒன்று திருடப்பட்டிருந்த நிலையில், அந்த கிளி இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

